பந்தலூர் அருகே, ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள், பொதுமக்களை துரத்தி அட்டகாசம் செய்தன. இதில் அவர்கள் அலறியடித்தவாறு ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.

நீலகிரி

பந்தலூர்: பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள், பொதுமக்களை துரத்தி அட்டகாசம் செய்தன. இதில் அவர்கள் அலறியடித்தவாறு ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.

வீட்டுக்குள் புகுந்தது

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுயானைகள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பந்தலூர் அருகே தொண்டியாளம், இரும்புபாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அதன்படி தொண்டியாளம் சாலை ஓரத்தில் குடியிருக்கும் ஜானகி என்பவரின் வீட்டின் கம்பிவேலியை உடைத்து வீட்டின் வாசலுக்குள் காட்டுயானைகள் நுழைந்தது. மேலும் அங்கு நின்ற 2 கார்களை தும்பிக்கையால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து காட்டுயானைகள் பந்தலூர்-உப்பட்டி சாலையை வழிமறித்து நின்றன. மேலும் பொதுமக்களையும், விரட்ட வந்த வனத்துறையினரையும் துரத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். இதையடுத்து சிறிதுநேரத்தில் காட்டுயானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு

இந்த நிலையில் நேற்று காலை இரும்புபாலம் பகுதிக்குள் 2 காட்டுயானைகளும் திடீரென புகுந்தன. இதற்கிடையே பொதுமக்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் வீடுகளை விட்டுவெளியே வந்தனர். அப்போது அவர்களை காட்டுயானைகள் பார்த்ததும் ஓட, ஓட துரத்தியது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் காட்டுயானைகளிடம் இருந்து தப்பிக்க அங்கும், இங்குமாக கூச்சலிட்டவாறு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் காட்டுயானைகள் தொடர்ந்து விடாமல் ஆக்ரோஷத்துடன் தும்பிக்கையை தூக்கி கொண்டும், வாலை சுருட்டியவாறும் துரத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டும், மறைவான இடத்திற்கும் சென்று பதுங்கி உயிர் தப்பினர். இதையடுத்து சிறிதுநேரத்தில் அங்கிருந்து காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

சாலை மறியல்

பின்னர் காட்டுயானைகள் அட்டகாசத்தை கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள் கடைகளை அடைத்து பந்தலூர் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் மழை பெய்தது. ஆனாலும் அவர்கள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு நின்று மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த தாசில்தார் கிருஸ்ணமூர்த்தி, தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் தேவாலா போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள், அவர்களிடம் காட்டுயானைகளை பிடித்து முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் ஓம்கார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், காட்டு யானைகளை பிடிக்க வேண்டுமானால் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறவேண்டும். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி, அனுமதி பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை காட்டுயானைகளை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story