சத்தியமங்கலம் அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலிங்கம்- புலிக்குத்தி நடுகற்கள் கண்டுபிடிப்பு


சத்தியமங்கலம் அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலிங்கம்-  புலிக்குத்தி நடுகற்கள் கண்டுபிடிப்பு
x

சத்தியமங்கலம் அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவலிங்கம் மற்றும் 2 புலிக்குத்தி நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவலிங்கம் மற்றும் 2 புலிக்குத்தி நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

சிவலிங்கம்

சத்தியமங்கலத்தை அடுத்த அங்கணகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய விவசாய நிலத்தை முனுசாமி உழுது உள்ளார். அப்போது நிலத்தில் மண்ணில் புதைந்த நிலையில் பெரிய கல் ஒன்று தென்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கல் தென்பட்ட இடத்தை தோண்டி பார்த்தார். அப்போது அதில் ஒரு சிவலிங்கம் மற்றும் 2 புலிக்குத்தி நடுகற்கள் கிடைத்தன.

3 அடி உயரம்

இதுபற்றிய தகவல் கோவையில் உள்ள அரண் பணி அறக்கட்டளையை சேர்ந்தவர்களுக்கு கிடைத்தது. உடனே அரண் பணி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் சத்திமங்கலத்தை அடுத்த அங்கணகவுண்டன்புதூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சிவலிங்கம் மற்றும் 2 புலிக்குத்தி நடுகற்கனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் மண்ணில் புதைந்து கிடக்கும் சிலைகளை கண்டெடுத்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சத்தியமங்கலம் அருகே உள்ள அங்கணகவுன்டன்புதூரில் சிவலிங்கம் மற்றும் 2 புலிக்குத்தி நடுகற்கள் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இங்கு வந்து பார்த்தபோது சிவலிங்கம் 3 அடி உயரம், 2 அடி விட்டத்துடன், ஆதார பீடத்துடன் கிடைத்து உள்ளது.

800 ஆண்டுகளுக்கு...

மேலும் இந்த சிலைக்கு அருகே 600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செங்கல்லும் கிடைத்து உள்ளது. அதுமட்டுமின்றி சிவலிங்கத்துடன் 3 நந்தி சிலைகளும், 2 புலிக்குத்தி நடுகற்களும் கிடைத்து உள்ளன. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த கிராமப் பகுதியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் நடமாட்டம் இருந்ததாகவும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலியுடன் அந்த பகுதியில் உள்ள வீரர்கள் சண்டையிட்டு இறந்ததால் அதன் நினைவாக இதுபோன்ற புலிக்குத்தி நடுகற்கள் நடப்பட்டு உள்ளதாகவும் கருதப்படுகிறது. ஒரு நடுகல்லில் வீரர் ஒருவர் ஈட்டியால் குத்துவது போன்றும், அதில் வேட்டை நாய்கள் மற்றும் அந்த வீரரின் மனைவியும் இருப்பது போல உருவங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. மற்றொரு நடுகல்லில் கூர்வாளால் குத்துவது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பூஜை செய்து வழிபாடு

சிவலிங்கத்துக்கு கோவை அரண் பணி அறக்கட்டளை மூலமாக மேற்கூரை மற்றும் கற்கோயில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சிவலிங்கம் மற்றும் நடுகற்களை ஆய்வு செய்து அதன் வரலாறுகளை முழுமையாக மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்போம்,' என்றனர்.

இந்த நிலையில் சிவலிங்கத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு மரத்தடியில் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.


Related Tags :
Next Story