தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து 3 காட்டு யானைகள் அட்டகாசம் 200 வாழைகள் நாசம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து 3 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் 200 வாழைகள் நாசமாயின.
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து 3 காட்டு் யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் 200 வாழைகள் நாசமாகின.
வாழைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தைப்புலி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட தமிழ்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது57). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
நாசப்படுத்திய யானைகள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 3 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே தமிழ்புரம் கிராமத்தில் உள்ள பழனிச்சாமியின் வாழைத்ேதாட்டத்துக்குள் புகுந்தன.
சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த பழனிச்சாமி ஓடிச்சென்று பார்த்தார். அப்போது தோட்டத்தில் 3 காட்டு் யானைகள் நின்று கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டன. வாழை குருத்துகளை தின்றும், வாழை மரங்களை மிதித்தும் நாசப்படுத்தி கொண்டிருந்தன.
காட்டு்க்குள் சென்றன
அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன. யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமடைந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, 'வாழைகள் குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தன. அதற்குள் யானைகள் வந்து வாழைகளை நாசம் செய்துவிட்டது. உடனே சேதமடைந்த வாழைகளுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்கவும், யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வனப்பகுதியை சுற்றி அகழி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றார்.