தாளவாடி அருகே கன்றுக்குட்டியை புலி கடித்து குதறியது கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாளவாடி அருகே கன்றுக்குட்டியை புலி கடித்து குதறியது அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ளனா்.
தாளவாடி அருகே கன்று குட்டியை கடித்து குதறிய புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடு, மாடுகள் வேட்டை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து அடிக்கடி புலி, சிறுத்தைப்புலிகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகின்றன.
தாளவாடி அடுத்த தொட்டமுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 58). விவசாயி. இவர் மாடுகளும் வளர்த்து வந்தார். தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிவைத்து விட்டு, தீவனம் போட்ட பின்னர் மாதேவன் வீட்டுக்கு சென்றுவிடுவார்.
கூண்டு வைக்க கோரிக்கை
வழக்கம்போல் நேற்று காலையும் மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலையில் மீண்டும் கொட்டகைக்கு வந்து பார்த்தார்.
அப்போது ஒரு கன்றுக்குட்டி கடித்து குதறப்பட்ட நிலையில் பாதி உடல் மட்டும் கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாதேவன் உடனே ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் வனத்துறையினர் கால்நடை டாக்டருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கிடந்த கன்றுக்குட்டியின் உடல் மற்றும் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அதன்பிறகு வனத்துறையினர் கூறும்போது, கன்றுக்குட்டியை கடித்து குதறியது புலி என்று கூறினார்கள்.
இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புலியை கூண்டு வைத்து விரைவில் பிடிக்கவேண்டும் என்றும், மாதேவனுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.