திருக்கோவிலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி கணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


திருக்கோவிலூர் அருகே  மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி  கணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x

திருக்கோவிலூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 50). தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா(45). இவர்களுக்கு குணசேகரன், தர்ஷன் ஆகிய 2 மகன்களும், சவுந்தர்யா, பூங்கொடி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் பிளஸ்-2 படித்து வந்த சவுந்தர்யா, பள்ளிக்கு சென்று வரும் போது வாலிபர் ஒருவடன் பழகியதாக தெரிகிறது. இதை ஆறுமுகம் கண்டித்துள்ளார்.

மனைவியின் கழுத்தை அறுத்து...

இதனால் சவுந்தர்யா பள்ளிக்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் ஆறுமுகம், மகளை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி தனது மனைவி அம்பிகாவை திட்டி, வந்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத ஆறுமுகம் நேற்று இரவு தனது மனைவி அம்பிகாவின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக தெரிகிறது. இதில் அவா் வலியால் அலறித்துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆறுமுகம் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் தன் வீட்டின் முன்பு நிற்பதை கண்டு பயந்துபோன ஆறுமுகமும் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டார்.

இதற்கிடையே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தர்ஷன் மற்றும் பூங்கொடி ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது தந்தையும், தாயும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து இருவரும் வீட்டின் கதவை திறந்து வெளியே ஓடிவந்தனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இதையடுத்து வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் உள்ளே சென்று கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story