உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


உளுந்தூர்பேட்டை அருகே  மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொட்டையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேனன் மகன் சரண்(வயது 20) என்பவரும் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, சரண் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போராட்டம்

இந்த சம்பவம் பற்றி அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சித்தாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் தனியார் கல்குவாரி கிரஷர் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story