வருசநாடு அருகேபஞ்சம்தாங்கி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ:மரங்கள் எரிந்து நாசம்
வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலையில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் முயல், காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. மேலும் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் வெயில் காலங்களில் பஞ்சம்தாங்கி மலை பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். அதுபோன்ற நேரங்களில் வனத்துறையினர் மலைப்பகுதிக்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் நேற்று வரை மலைப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதன்காரணமாக ஏராளமான மரங்கள் தீயில் கருகி நாசமாகின. எனவே காட்டுத்தீயை அணைக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் மர்ம நபர்கள் யாரேனும் காட்டுத்தீயை ஏற்படுத்தி வருகிறார்களா என்பதை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.