வருசநாடு அருகே மகளை கொன்று தாய் தற்கொலை; மகன் உயிர் ஊசல்
வருசநாடு அருகே கடன் தொல்லையால் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கடன் தொல்லை
வருசநாடு அருகே உள்ள பூசணியூத்து கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி ஆண்டிச்சி (வயது 35). இந்த தம்பதிக்கு காவியா (17) என்ற மகளும், கிருஷ்ணகுமார் (14) என்ற மகனும் இருந்தனர். காவியா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கிருஷ்ணகுமார் 9-ம் வகுப்பு படிக்கிறார். ஆண்டிச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது குழந்தைகளுடன் வருசநாடு அருகே சாந்திபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
அங்கு மாட்டு கொட்டகை அமைத்து 6 மாடுகளை வளர்த்து வந்ததுடன், பால் பண்ணையும் வைத்திருந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பால் பண்ணையில் வியாபாரம் சரியாக நடக்காததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் கடன் தொல்லையால் ஆண்டிச்சி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
தாய், மகள் சாவு
அப்போது தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என எண்ணி அவர்களையும் கொல்ல முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று இரவு ஆண்டிச்சி மனதை கல்லாக்கி கொண்டு தனது 2 குழந்தைகளுக்கும் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை உணவில் கலந்து கொடுத்து தூங்க வைத்தார். பின்னர் தானும் அதனை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே இன்று காலை ஆண்டிச்சியின் தாய் அழகம்மாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் பதற்றமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஆண்டிச்சி, காவியா ஆகிய 2 பேரும் இறந்து கிடந்தனர். கிருஷ்ணகுமார் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்டு அழகம்மாள் கதறி அழுதார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.
மகனுக்கு தீவிர சிகிச்சை
இதையடுத்து அழகம்மாள் வருசநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கிருஷ்ணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஆண்டிச்சி, காவியா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருசநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.