விழுப்புரம் அருகேமின்வாரிய காவலாளியிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே மின்வாரிய காவலாளியிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா முகையூரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 49). இவர் மின்வாரிய அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரான்சிஸ் சேவியரை செல்போனில் தொடர்புகொண்டார். அப்போது அவர், தான் மும்பை கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாகவும் உங்களது கிரெடிட் கார்டின் சர்வீஸ் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக உயர்த்தப்போவதாகவும், அவ்வாறு மாறாமல் இருக்க எனிடெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறினார்.
அதன்படி பிரான்சிஸ்சேவியர், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து தனது பெயர், பிறந்த தேதி, தன்னுடைய கிரெடிட் கார்டு எண் ஆகியவற்றை பதிவு செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 374-ஐ 11 தவணைகளாக மர்ம நபர் எடுத்துவிட்டதாக பிரான்சிஸ் சேவியரின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.