ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்களில் 4 ஆயிரத்து 313 பேர் நீட் தேர்வு எழுதினர்; மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வை 4 ஆயிரத்து 313 பேர் எழுதினர். இதில் மாணவ- மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வை 4 ஆயிரத்து 313 பேர் எழுதினர். இதில் மாணவ- மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நீட் தேர்வு
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதுவரை வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வை மாணவ- மாணவிகள் எழுதி வந்ததால் சிரமம் அடைந்தனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 4 ஆயிரத்து 395 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஈரோடு திண்டலில் உள்ள கீதாஞ்சலி பள்ளிக்கூடம், ஈரோடு அருகே கூரபாளையத்தில் உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரி, நந்தா சென்ட்ரல் பள்ளிக்கூடம், அவல்பூந்துறை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கூடம், கோபி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரி, கோபி வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளிக்கூடம் ஆகிய 7 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதையொட்டி காலையில் இருந்தே தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் வர தொடங்கினர். அவர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயில் பகுதியில் ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும் தேர்வு கண்காணிப்பாளர்கள் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதித்தனர்.
மாணவ-மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவிகள் வளையல், கொலுசு, கம்மல், செயின் போன்ற ஆபரணங்களை அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வு மையத்துக்கு முன்பு நின்றபடி மாணவிகள் ஆபரணங்களை கழற்றி உடன் வந்தவர்களிடம் கொடுத்தனர். ஜடை பின்னலுடன் தேர்வு எழுத செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தலைமுடி பின்னலை கழற்றிய பிறகே உள்ளே சென்றனர்.
98.13 சதவீதம்
நுழைவு சீட்டு மற்றும் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவ-மாணவிகளின் கைகளில் கயிறு கட்டப்பட்டு இருந்தால், அந்த கயிற்றை அறுத்து அகற்றினார்கள். இதேபோல் கைக்கெடிகாரம், பெல்ட் அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. முக கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை மொத்தம் 4 ஆயிரத்து 313 பேர் எழுதினர். 82 பேர் மட்டும் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 98.13 சதவீதம் பேர் தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடந்த நீட் தேர்வை 92.79 சதவீதம் பேர் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.