நீட் தேர்வில் தேர்ச்சி: 117 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர தகுதி


நீட் தேர்வில் தேர்ச்சி: 117 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர தகுதி
x
தினத்தந்தி 15 Jun 2023 7:00 PM GMT (Updated: 16 Jun 2023 1:03 AM GMT)
தர்மபுரி

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 117 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு

இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ந் தேதி நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5,331 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 120 திறன்மிகு ஆசிரியர்கள் மூலம் 46 வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

117 பேர் தகுதி

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளில் 117 பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் போது தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மேலும் சில மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் படித்த 40 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேரவும், 8 மாணவ, மாணவிகள் பல் மருத்துவ படிப்பில் சேரவும் தேர்வு பெற்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள், பயிற்சி அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story