குமரியில் இன்று 6 மையங்களில் நீட் தேர்வு4,715 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6 மையங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 4,715 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6 மையங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 4,715 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
நீட் நுழைவுத்தேர்வு
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (நீட்) தேசிய தேர்வு முகமையின் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடக்கிறது.
குமரி மாவட்டத்திலும் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது. அதாவது நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி, நாகர்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடக்கிறது.
4,715 பேர் எழுதுகிறார்கள்
இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 4,715 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ேதர்வு அறைகளில் மாணவ- மாணவிகளின் பதிவு எண்களை ஒட்டும் பணியில் ஆசிரிய- ஆசிரியைகள் நேற்று ஈடுபட்டனர்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன், ப்ளூ டூத், எலெக்ட்ரானிக் பொருட்கள், கருவிகள், பென்சில், ஜியாமிட்ரி பாக்ஸ், கைகெடிகாரம், துண்டு காகிதங்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை. மாணவ- மாணவிகள் பரிசோதனைக்கு பிறகே தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கும்.