நீட் தேர்வு முடிவு: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சிவகங்கை மாணவி மாநிலத்தில் முதல் இடம்-அண்ணாமலை பாராட்டு
நீட் தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற சிவகங்கை மாணவியை அண்ணாமலை பாராட்டினார்.
எஸ்.புதூர்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், உலகம்பட்டி ஊராட்சி, மட்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் அன்னபூரணி. இவர் உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். பள்ளி படிப்பை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். குறைந்த மதிப்பெண்கள் எடுத்த நிலையில் நீட் பயிற்சி மைய ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு அறக்கட்டளை மூலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்று 538 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மாநில அளவில் அன்னபூரணி முதல் இடம் பெற்றுள்ளார்.அவருக்கு ஆசிரியர்கள், ஊர்மக்கள் உள்பட பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் சிவகங்கையில் நேற்று பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டத்தின்போது நீட் தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவி அன்னபூரணியை அண்ணாமலை பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
முன்னதாக அன்னபூரணி கூறும்ேபாது, அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்து நீட் தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. நீட் தேர்வு எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு, மன உறுதியுடன் படித்து தேர்வு எழுதினால் போதும். எளிமையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும், என்றார்.