ரெயில் முன் பாய்ந்து 'நீட்' பயிற்சி மாணவி தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து நீட் பயிற்சி மாணவி தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் உத்திராபதி. என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர் தனது வேலைக்காக நெய்வேலி 9-வது வட்டத்தில் தற்போது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது மகள் நிஷா (வயது 18). இவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 399 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

பின்னர் 'நீட்' தேர்வு எழுதுவதற்காக நெய்வேலி இந்திராநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து முழு நேர பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ளவர்களிடம் 'நீட்' பயிற்சி மையத்திற்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

மாணவி தற்கொலை

சற்று நேரத்தில் வடலூர் ரெயில் நிலையம் வழியாக சேராக்குப்பம் தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது மாலை 5.10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து காரைக்கால் நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்ததை பார்த்த நிஷா கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதைந்து போனது.

இதை பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். பின்னர் இதுபற்றி கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது, 'நீட்' பயிற்சி மையத்தில் நடந்த மாதிரி தேர்வில் நிஷா குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. ஏற்கனவே தன்னை கஷ்டப்பட்டு பெற்றோர் படிக்க வைத்து வந்ததாலும், 'நீட்' மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

'நீட்' பயிற்சி பெற்று வந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story