பேச்சுவார்த்தையில் தீர்வு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராட்டம் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அன்னவாசல் அருகே உள்ள காவேரி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் டாக்டர் நியமிக்க வேண்டும். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சமாதான கூட்டம் காவேரி நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் நல்லப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் அண்ணாதுரை, மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன், மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண் டாக்டர் நியமனம் செய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் உறுதியளித்ததின் பேரில் 8-ந் தேதி நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.