சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x

மோகனூரில் சிப்காட் எதிர்ப்பு குழுவினருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.

நாமக்கல்

மோகனூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

மோகனூர் அடுத்த வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி மற்றும் லத்துவாடி பகுதிகளில் நில அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே சிப்காட் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்களும், விவசாயமும் பாதிக்கப்படும் என விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து வருகிற 15-ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று மோகனூர் தாசில்தார் அலுவலகத்தில், நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் தலைமையில் சிப்காட் எதிர்ப்பு குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வருகிற 23-ந் தேதி நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்படும் எனவும் உதவி கலெக்டர் தெரிவித்தார். அதற்கு சிப்காட் எதிர்ப்பாளர்களுடன் அதிகாரிகள் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி முடிவெடுக்கும் வரை, சிப்காட்டிற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் திட்டமிட்டபடி 15-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என சிப்காட் எதிர்ப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து சிப்காட் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படாது என்ற அரசாணையை உதவி கலெக்டர் சரவணன் அவர்களிடம் வழங்கினார்.

இதில் தாசில்தார் மணிகண்டன், நாமக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், விவசாய முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் செல்ல ராசாமணி, மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், அ.தி.மு.க. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கொ.ம.தே. கட்சி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி பிரபாகரன், சிப்காட் எதிர்ப்பு குழு நிர்வாகிகள் ராம்குமார், சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story