தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே குளத்துப்பாளையம் புதூரில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகாவிடம், ஒரு தரப்பினர் மனு கொடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று மாலையில் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் மல்லிகா பேசும்போது, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அரசு மூலம் தீர்வு காணப்படும் என்றார்.
இதையடுத்து இரு தரப்பினரும் இணைந்து கும்பாபிஷேக விழாவை நடத்துவதாக எழுத்துப்பூர்வமாக தாசில்தாரிடம் உறுதி அளித்துவிட்டு, கலைந்து சென்றனர். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் முத்து, கிணத்துக்கடவு மண்டல தாசில்தார் செல்வராஜ், தேவணாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.