நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 28-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா


நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 28-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா
x

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம், காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்துஅய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற 28-ம் தேதி நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இன்று காலை சுமார் 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் பொறுப்பாளர் டி.என்.எஸ்.எம்.சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உட்பட கோவில் கோமரத்தாடிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வழக்கமாக இக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோவில் விழா நடப்பதால் திருவிழா அன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வருகின்ற 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அகஸ்தியர்பட்டியிலிருந்து நாள் ஒன்றுக்கு 120 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல காணிக்குடியிருப்பிலிருந்து இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கோவிலின் சார்பில் வைக்கப்படும் கடைகளில் பாலீத்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. முக்கியமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டுவரக்கூடாது. ஹோட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆடு வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது ஆற்று தண்ணீரில் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சந்நதிக்கு முன்பு சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story