நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்ட திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது


நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்ட திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 19 Jun 2023 7:47 PM GMT (Updated: 20 Jun 2023 7:16 AM GMT)

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

ஆலோசனை கூட்டம்

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. தேரோட்டம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், திருவிழா நாட்கள் மற்றும் தேரோட்ட நாளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், போக்குவரத்து மாற்றம் ஆகியவை குறித்தும், மாநகராட்சி, நெடுஞ்சாலை சார்பில் சாலைகளை சீரமைத்தல், பக்தர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ சேவை உள்ளிட்டவை செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தடையில்லா மின்சாரம்

மேலும் சிறப்பு பஸ்கள், தடையில்லா மின்சாரம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

ரதவீதியில் இலவச உணவு வழங்குவதை தவிர்த்து, பாதுகாப்பாக பக்தர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் போலீசாரிடன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும்.

வாகனம் நிறுத்துவதற்கு சாப்டர் மேல்நிலைப்பள்ளி, ஆர்ச் தாமரைக்குளம், லிட்டில் பிளவர் பள்ளி மைதானம், கல்லணை பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, உழவர் சந்தை, போத்தீஸ் கார் பார்க்கிங் ஆகிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்ட்டு உள்ளது. பக்தர்கள் அங்கு சென்று தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

ஆனித்தேரோட்ட திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story