அகில இந்திய அளவிலான ஆக்கிப்போட்டிக்கு நெல்லை பல்கலைக்கழக அணி தகுதி
அகில இந்திய அளவிலான ஆக்கிப்போட்டிக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி தகுதி பெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில் 68 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி கலந்துகொண்டு 2-வது இடத்தை பிடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆக்கிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் கோவில்பட்டியை சேர்ந்த வீரர் கார்த்திக் ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அணியில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் வென்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்தார். அவரையும் ஆக்கி அணி வீரர்களையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் வாழ்த்தி பாராட்டினார். இதுபோன்று அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியிலும் வெற்றி பெற்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென வீரர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, பல்கலைக்கழக நிதி அலுவலர் மரிய ஜோசப், விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.