நெல்லிக்குப்பம் அச்சீவர் அணி சாம்பியன்


நெல்லிக்குப்பம் அச்சீவர் அணி சாம்பியன்
x

கடலூரில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் நெல்லிக்குப்பம் அச்சீவர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடலூர்

கடலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி (மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை 2023-2024) கடந்த மாதம் 20-ந்தேதி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

போட்டியில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு பெற்ற கடலூர் காஸ்மோ கிரிக்கெட் கிளப் ஏ அணி, பி அணி, நெல்லிக்குப்பம் அச்சீவர், திருப்பாதிரிப்புலியூர் கிரிக்கெட் கிளப், கடலூர் சாய் கிரிக்கெட் கிளப் உள்பட கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.

இறுதி போட்டி

நாக்- அவுட் முறைப்படி நடந்த இந்த போட்டியில் நெல்லிக்குப்பம் அச்சீவர் அணியும், கடலூர் சாய் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நேற்று 30 ஓவர்களை கொண்ட இறுதிப்போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற அச்சீவர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ஆடிய அந்த அணி வீரர்கள் 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக அந்த அணியின் பேட்ஸ்மேன் ரகு 92 ரன்களை எடுத்து, ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். சாய் அணி பந்து வீச்சாளர் பாலா 6 ஓவர்கள் வீசி, 35ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சாய் அணி வீரர்கள் களம் கண்டனர். ஆனால் அந்த அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 156 ரன்களுக்குள் சுருண்டது. அச்சீவர் அணி பந்து வீச்சாளர் ஆதி 6 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டு கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் அச்சீவர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

சுழற்கோப்பை பரிசு

இதையடுத்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிரிக்கெட் சங்க மாவட்ட துணை தலைவர் வெங்கடேஷ் கலந்து கொண்டு, சாம்பியன் ஆன அச்சீவர், 2-வது இடம் பிடித்த சாய் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

முன்னதாக சிறந்த பேட்ஸ்மேன் ரகு, சிறந்த பந்து வீச்சாளர் பாலா, தொடர் நாயகன் பிரசன்னா ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story