ஆடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை- கலெக்டர்


ஆடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை- கலெக்டர்
x

ஆடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்

ஆடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

மரக்கன்று நடும் விழா

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட கீழ மருத்துவக்குடியில் உள்ள குளத்தை சுற்றிலும், பாதுகாப்பு கூண்டுடன் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு, மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது ஆடுதுறை பேரூராட்சியில் 1300-க்கு மேல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர், தாசில்தார் சுசீலா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் ராம்பிரசாத், சிவலிங்கம், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்கனுர் சுப்பிரமணியன், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் வேலாயுதம், பேரூராட்சி உறுப்பினர்கள் ம.க.பாலதண்டாயுதம், ஆர்.வி.குமார், மீனாட்சி முனுசாமி, மாலதி சிவக்கொழுந்து, பரமேஸ்வரிசிவக்குமார், முத்துபேபிஷாஜகான், ஆடுதுறை வர்த்தக சங்க கவுரவ தலைவர் அழகு பன்னீர்செல்வம், ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நசீர் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பஸ் நிலையத்தில் ஆய்வு

இதையடுத்து அந்த பகுதியில் 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆடுதுறை பேரூராட்சி பஸ் நிலையத்தை கலெக்டர், பேரூராட்சி தலைவருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில், நடப்பு சம்பா, தாளடி பருவத்தில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 700 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 524 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, இன்று வரை 3 லட்சத்து 32 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதல். திருப்பனந்தாள், திருவிடைமருதூர் வட்டாரங்களில் அறுவடை நிறைவடையும் நிலையில் உள்ளது.

நெல் அரவை

தஞ்சை, பூதலூர் வட்டாரங்களில் தற்போது தான் அறுவடை பணி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி வரை அறுவடை நீடிக்கும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்காமல் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் இருந்தும், 2 நாட்களுக்கு ஒருமுறை பட்டுக்கோட்டையில் இருந்தும் சரக்கு ரெயில் மூலம் அரவைக்கு நெல் அனுப்பி வைக்கப்படுகிறது.

புதிய பஸ் நிலையம்

வரும் 7-ந் தேதிக்கு முன்பாக கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லின் அளவு கணிசமாக குறையும். இந்த மாதம் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 40 அரவை ஆலைகளுக்கு 80 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆடுதுறை பேரூராட்சி பஸ் நிலையத்தை சீரமைத்து புதிதாக கட்டுவது தொடர்பாக அரசிற்கு கடிதம் எழுதி சிறப்பு நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திருலோக்கி ஊராட்சி நெடுந்திடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் அந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வியின் தரம் குறித்தும், மதிய உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது தாசில்தார் சுசீலா, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story