கூடலூரில் புதிய பஸ் நிலையம்:விரிவாக்க பணிக்கு கூடுதலாக ரூ.63 லட்சம் ஒதுக்கீடு


கூடலூரில் புதிய பஸ் நிலையம்:விரிவாக்க பணிக்கு கூடுதலாக ரூ.63 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 26 Jun 2023 5:00 AM GMT (Updated: 26 Jun 2023 9:01 AM GMT)

கூடலூரில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக கூடுதலாக ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரி

கூடலூர்: கூடலூரில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக கூடுதலாக ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

போக்குவரத்து நெருக்கடி

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சாலையில் கூடலூர் நகரம் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கூடலூர் புதிய பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நிலையில், அங்கு போதிய இடவசதி இல்லை.

இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் கூடலூர் நகர சாலையோரம் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

கூடுதலாக ரூ.63 லட்சம் ஒதுக்கீடு

தொடர்ந்து பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் வணிக வளாகங்களுடன் கூடிய புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து போக்குவரத்து பணிமனை விரிவாக்க பணியும் நடந்தது. இதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் எப்போது நடைபெறும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.

கூடலூர் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் நடராஜன் கூடலூர் பணிமனைக்கு நேற்று வந்தார். அப்போது அவரிடம் கேட்டபோது, புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக கூடுதலாக ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தின் பின்புறம் புதிதாக கட்டப்பட்டு உள்ள பணிமனைக்கு செல்ல சாலை அமைக்கப்படும். தொடர்ந்து மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும். மேலும் 3 மாதங்களில் பஸ் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது கூடலூர் கிளை மேலாளர் அருள் கண்ணன் உடனிருந்தார்.


Next Story