புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்


புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்
x

பள்ளிகொண்டா மற்றும் பேரணாம்பட்டில் புதிய உழவர் சந்தைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வேலூர்

உழவர் சந்தை திறப்பு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.57 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் உழவர் சந்தை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

பின்னர் 16 கடைகளை திறந்து வைத்து மின்னணு எடை தராசு வழங்கி எந்த விதமான வாடகையும் இன்றி காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம் என விவசாயிகளிடம் கூறினர்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, தாசில்தார் வேண்டா, வேளாண்மை துறை துணை இயக்குனர் (விற்பனை மற்றும் வணிகவரி) கலைச்செல்வி, வேளாண்மை உதவி செயற்பொறியாளர் வடிவேலு, தோட்டக்கலை துணை இயக்குனர் மணிகண்டன், அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுப பிரியா குமரன், செயல் அலுவலர் உமாராணி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உழவர் சந்தை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கலெக்டர் பட்டா வழங்கினார். மேலும் 4 பேருக்கு விரைவில் பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு ஒன்றியம் பங்களாமேடு பகுதியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட உழவர் சந்தை, வேளாண் பொருட்கள் கூடுதல் மதிப்பூட்டல் செய்யப்பட்ட அங்காடி ஆதியவை திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உழவர் சந்தை தொடக்க விழா நடந்தது. குடியாத்தம் சப்- கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், நகராட்சி துணை தலைர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட், ஒழுங்கு முறை விற்பனைக் குழு செயலாளர் கண்ணன், வேளாண்மை அலுவலர் சுதாகரன், மாவட்ட, ஒன்றியக் குழு, நகராட்சி கவுன்சிலர்கள், நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகராட்சி துணைத் தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத் அங்கிருந்த வேளாண் வணிகத் துறை அதிகாரியிடம் ஏன் நகராட்சி தலைவர், துணைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் இது குறித்து கலெக்டருக்கு புகார் தெரிவிப்பதாகவும் கூறினார்.


Next Story