புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:-
பள்ளிபாளையத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.
புதுப்பெண்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 62). இவருடைய மகன் ராகவேந்திரன்சாமி (32). திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் அபிராமிக்கும் (31) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
அபிராமி ஈரோட்டில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே அபிராமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தூக்கில் பிணம்
நேற்று காலை ராகவேந்திரன்சாமி வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அபிராமி தன்னுடைய தாயிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கு ராகவேந்திரன்சாமியின் தாயார் நாகம்மாள் மட்டும் இருந்தார். அபிராமி தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டதாக தெரிகிறது.
நீண்டநேரம் ஆகியும் அபிராமி அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாகம்மாள், தன்னுடைய கணவர் சுந்தருக்கு போன் செய்தார். அவர் விரைந்து வந்து கதவை வேகமாக தள்ளி திறந்தார். அங்கு அபிராமி சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், சண்முகபிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அபிராமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அபிராமி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். மேலும் அபிராமிக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆவதால் உதவி கலெக்டர் விசாரணையும் நடந்து வருகிறது.