மாமல்லபுரத்தில் அரியவகை ஆமைகளை பாதுகாக்க புதிய குடில்கள்
மாமல்லபுரத்தில் ஆமைகள் தங்கி செல்வதற்கும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வசதியாக மரத்தூள் அடித்தள குடில்கள் அமைத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
"ரேடிசன் ப்ளு" கடற்கரை ரிசார்ட் பகுதியில் "ஆலிவ் ரிட்லி" என்ற அரியவகை ஆமைகள் கடல்சீற்றம், சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் காயங்களுடனும், இறந்தும் கரை ஒதுங்கி வந்தது. டிசம்பர் முதல் மார்ச் மாதங்களில் பெண் ஆமைகள் மட்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க இங்கு வருகிறது.
அழிந்து வரும் இவ்வகை ஆமைகளின் உயிரை பாதுகாக்க ரிசார்ட் தலைமை நிர்வாகிகள் முடிவுசெய்து டாக்டர் சுப்ரஜா, என்பவரின் ட்ரீ பவுண்டேஷனுடன் இணைந்து ஆமைகள் தங்கி செல்வதற்கும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வசதியாக மரத்தூள் அடித்தள குடில்கள் அமைத்துள்ளனர். கடல்நிலை போன்ற குளங்களும் அமைத்து வருகிறார்கள்.
ஆமைகள் அங்கு வந்து தங்கியுள்ளது தெரிந்தால் அப்பகுதிகளுக்கு வேறு கால்நடைகள் செல்லாத வண்ணம் காவலாளிகளை வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆமைக்கு தேவையான மருந்து, முதலுதவி கருவிகளுடன் மின் கால்நடை மருத்துவமனையும் அமைக்க உள்ளனர். இதன் அறிமுக விழா அப்பகுதியில் கடலோரத்தில் நடைபெற்றது.