சென்னையில் 358 இடங்களில் புதிய நவீன கழிவறைகள் - மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தகவல்
சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரமும், நேரமில்லா நேரமும் அடுத்தடுத்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு மேயர் பிரியா அளித்த பதில்களும் வருமாறு:-
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.) :- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் 348 நவீன கழிவறைகள்(இ-டாய்லெட்கள்) கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றன. ஆனால் நிர்வாக சீர்கேடு, முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டப்பட்ட சில கழிவறைகளும் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
மேயர் பிரியா:- தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள நவீன கழிவறைகளை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து, அதனை சரிசெய்ய அறிவுறுத்தியதால் 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் கழிவறை அமைக்கப்பட உள்ளது.
சேட்டு (அ.தி.மு.க.):- புழல் 24-வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் மட்டுமே நடந்து வருகிறது. குறைவான ஊழியர்களே இருப்பதால் இதர நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுவது கிடையாது?
மேயர் பிரியா:- உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேவையான ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
ஜீவன் (ம.தி.மு.க.) :- திருக்குறள், தீண்டாமை உறுதிமொழிக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி மாமன்ற கூட்டம் தொடங்கப்பட்டால் அது தமிழுக்கான சிறப்பாக அமையுமே...
மேயர் பிரியா:- அடுத்த மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடனே தொடங்கும். இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.
சிவராஜசேகரன் (காங்கிரஸ்) :- செல்லப்பிள்ளை கோவில் தெருவில் சிதிலமடைந்து இருக்கும் சமுதாய நலக்கூடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படுமா?
மேயர் பிரியா:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சரஸ்வதி (இந்திய கம்யூனிஸ்டு) :- எனது 123-வது வார்டில் பள்ளி அமைந்திருக்கும் நடைபாதைகளில் கடைகள் என்ற பெயரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?. எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை மீன்மார்க்கெட் வளாகத்தில் கழிவறை அமைக்கப்படுமா?
மேயர் பிரியா:- ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலையில் குறிப்பிடும் மீன்மார்க்கெட் வளாகங்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், மாநகராட்சி பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்று விரைவில் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
குமாரசாமி (விடுதலை சிறுத்தைகள்):- 73-வது வார்டு குக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?
மேயர் பிரியா:- நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.
கூட்டத்தில் ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்து, வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை செயலாளராக நியமித்து ஏரியா சபைகளை நடத்துவதற்கான அனுமதி கோருவது என்பது உள்ளிட்ட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக காந்தி நினைவுதினத்தையொட்டி மன்றக்கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயம் காலை 11 மணிக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவுகூறும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாத சம்பளம், கார் கேட்ட கவுன்சிலர்கள்
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய பல கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் போல தங்களுக்கும் மாத ஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். அப்போது துணை மேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு, 'கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது' என பேசினார்.
இதையடுத்து மேயர் பிரியா, 'இதுதொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் நல்ல செய்தி வரும்' என்று தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
இதேபோல கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு தனி கார்கள் வழங்கவேண்டும். இல்லாவிடில் மண்டலக்குழு தலைவர்களுக்காவது வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மயங்கி விழுந்த பெண் கவுன்சிலரால் பரபரப்பு
மாநகராட்சி மன்ற கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் பேசிக்கொண்டே இருந்ததால் வழக்கமான நேரத்தை தாண்டி மன்ற கூட்டம் நடந்தது. இந்தநிலையில் பிற்பகல் 2 மணி தாண்டிய நிலையில் 14-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் பானுமதி உட்கார்ந்த இடத்திலேயே மயங்கி சரிந்தார். அவரை சக்கர நாற்காலி மூலம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பசியால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின்னர் பானுமதி வீடு திரும்பினார்.