தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம்


தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம்
x

சென்னை தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் புதிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.

சென்னை

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் ரூ.19 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர், திட்ட வரைபடங்களை பார்வையிட்டார்.

இதையடுத்து மாம்பலம் கால்வாயில் ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கோடம்பாக்கம் மண்டலம் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் ஆயிரத்து 200 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணிகளை பார்வையிட்டார். அசோக்நகர் நிழற்சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியையும் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

காதர் நவாஸ்கான் சாலை பணியை 1½ ஆண்டுகளில் முடிக்க உள்ளோம். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளோம். சென்னை மாநகரின் குடிநீர் தேவை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பித்துள்ளோம்.

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் எங்கெல்லாம் இணைப்பு இல்லாமல் இருக்கிறதோ அங்கு இணைப்பு பணிகளை முடிக்க உள்ளோம். எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நா.எழிலன், த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

24 மணி நேரமும் திறந்து இருக்கும்

தேனாம்பேட்டை காதர் நவாஸ்கான் சாலையில் அமைக்கப்படவுள்ள நடைபாதை வளாகம் பாண்டிபஜாரில் உள்ள நடைபாதை போல அமைக்கப்பட உள்ளது. மேலும், கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் என 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் மாற்றப்பட உள்ளது, அலங்கார விளக்குகள், இருக்கைகள், பசுமை சூழல், மேம்படுத்தப்பட்ட சாலை சந்திப்பு போன்ற முக்கிய அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளது.


Next Story