உலககோப்பை கால்பந்தை பயன்படுத்தி அரங்கேறும் புதிய மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை


உலககோப்பை கால்பந்தை பயன்படுத்தி அரங்கேறும் புதிய மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x

உலககோப்பை கால்பந்து போட்டியை பயன்படுத்தி அரங்கேறும் புதிய மோசடி குறித்து பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்,

கத்தாரில் நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டி காரணமாக உலகெங்கும் கால்பந்து ஜூரம் எகிறியுள்ளது. எது ஒன்றையும் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல், ரசிகர்களின் கால்பந்து காதலையும் பயன்படுத்தி பணத்தைச் சுருட்ட களத்தில் இறங்கியுள்ளது. உங்கள் கையில் உள்ள செல்போனிலேயே அதற்கான தூண்டிலை போடுகிறது.

அதாவது, 'உலக கோப்பை கால்பந்து போட்டியை காண அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) 50 ஜி.பி. டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதை பெற்றேன். நீங்களும் 50 ஜி.பி. டேட்டாவை பெற இதை திறக்கவும்' என்று ஒரு லிங்க் வரும்.

அபாயம் அணைத்துக்கொள்ளும்

தற்போது பலரும் ஆன்லைன் வழியாக ஓ.டி.டி. தளங்களில்தான் உலககோப்பை போட்டியை ரசித்து வருகின்றனர். அதனாலேயே இங்கு லிங்க் தூண்டில்.

இந்த லிங்கை கிளிக் செய்து சென்றால், நான் 50 ஜி.பி. டே்டாவை பெற்றேன், மற்றொருவர் 35 ஜி.பி. டே்டாவை பெற்றேன் என்று அழகு தமிழில் கருத்துகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

நம்மையும் கருத்தை எழுதும்படி என்று ஒரு பாக்ஸ் வந்து நிற்கிறது. அதில் நாம் எழுதும்போதும் அபாயம் அணைத்துக்கொள்கிறது.

ஆம். அப்போது நமது வங்கிக்கணக்கு எண், பான் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு, மோசடி அரங்கேறும் என்று சைபர் கிரைம் பிரிவு போலீசார் எச்சரிக்கிறார்கள்.

டுவிட்டரில் டிரெண்ட்

இந்த லிங்க் வேகமாக பரவ தொடங்கியதுமே தமிழக போலீசார் உஷாராகிவிட்டனர். இதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம், இது ஒருவகையான மோசடி என்று தெரிவித்து, டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகளையும் வெளியிட்டு டிரெண்டிங்கில் வைத்தனர்.

அந்தவகையில் கடலூர், தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசாரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதில், 'எச்சரிக்கை மக்களே... இது ஒரு புதுவகையான மோசடி. ஆன்லைன் மூலம் உங்கள் பணம் திருடப்பட்டால், 1930 என்ற எண்ணுக்கோ அல்லது www.cybercrime.gov.in என்கிற இணையதள முகவரிக்கோ உடனடியாக புகார் தெரிவியுங்கள்' என்று கூறியுள்ளனர்.

'உஷாராக இருங்கள்'

இதுபற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் கேட்டபோது, 'தற்போது டிரெண்டிங் என்ன என்பதை அறிந்த ஆன்லைன் மோசடி கும்பல், 50 ஜி.பி. டேட்டா தருவதாக மோசடி வலையை விரித்து உள்ளார்கள். இதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றால், நீங்கள் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். எனவே உஷாராக இருங்கள்' என்றார்.

ஆக... கால்பந்து ரசிகர்களே... கவனம்... கவனம்!

வைரலான 'சீமான் வீடியோ'

50 ஜி.பி. டேட்டா தொடர்பான லிங்க் பலரின் வாட்ஸ்அப் எண்களுக்கு நேற்று முன்தினம் வேகமாக பரவியது. அதே நேரத்தில் இதை வைத்து நெட்டிசன்கள் ஒரு வீடியோவையும் வெளியிட்டு வைரலாக் கினர்.

அதாவது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேறு ஒரு மேடையில் பேசி இருந்த பேச்சின் ஒரு பகுதியை பயன்படுத்தி, நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு வீடியோவை உலாவரச் செய்தனர். அதுவும் டிரெண்டிங்கில் இருந்தது.

அதாவது, 'இதை வேற எனக்கு அனுப்பிவைக்கிறார்கள். எவ்வளவுதான் அழிப்பது? நான் எரிச்சலில் யாருக்காவது அனுப்பி வைத்துவிடுவேன்' என்று சீமான்பேசும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அதன் மூலம், இந்த குறுந்தகவலை நகைச்சுவை கலந்த ஒன்று என்று பெரும்பாலான மக்கள் எளிதாக கடந்து சென்றுவிட்டனர்.


Next Story