புவி வெப்பமடைதலை தடுக்க புதிய தொழில்நுட்பம்


புவி வெப்பமடைதலை தடுக்க புதிய தொழில்நுட்பம்
x

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் தொழில் நுட்பத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி,

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் தொழில் நுட்பத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய தொழில் நுட்பம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வகம் இயங்கி வருகிறது. இங்குள்ள விஞ்ஞானிகள் கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவை உறிஞ்சும் திடப்பொருளை புதிய தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.

தற்போது புவி வெப்பமடைதல் அதிகரித்து வரும் வேளையில் இந்த கண்டுபிடிப்பு என்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த புதிய தொழில்நுட்பத்தை சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, சிராந்தி, வாசுதேவன், சிவசண்முகம் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். புதிய தொழில் நுட்பத்தை சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி கோவையில் உள்ள சம்மிட்ஸ் ஹைக்ரோனிக்ஸ் நிறுவனத்திடம் தொழில்நுட்ப முறையில் பரிமாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

காரைக்குடி சிக்ரி நிறுவனத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் வகையில் புதிதாக 19 கண்டுபிடிப்புகளை தேர்வு செய்துள்ளோம். இதில் 5 புதிய கண்டுபிடிப்புகளை இந்தாண்டு கண்டுபிடித்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளோம். அதில் முதல் கண்டுபிடிப்பாக இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம்.

கார்பன்-டை-ஆக்சைடு

இந்தியாவில் முதன்முறையாக திடநிலையில் கார்பன்-டை-ஆக்சைடு பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புவியின் சராசரி வெப்பத்தில் 1.5 சென்டிகிரேட் கூடியுள்ளது. இதை குறைப்பதற்கு ஆண்டிற்கு 2.5 சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு குறைக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் நிலை உருவாகும். அதற்கு இந்த கண்டுபிடிப்பு நல்லமுறையில் உதவும்.

இதன் முக்கிய அம்சம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை அதே வெப்பநிலையில் உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது. இவ்வாறு உறிஞ்சப்படும் இந்த கார்பன்-டை-ஆக்சைடு அடிப்பிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், பார்மிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்களாக உருமாற்றம் செய்தும் பயன்படுத்தலாம். தற்போது இந்த புதிய தொழில் நுட்பத்தை கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பரிமாற்றம் செய்துள்ளோம். இதை பயன்படுத்தி அவர்கள் சிமெண்டு ஆலை, அனல் மின் நிலையங்கள். இரும்பு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்துவார்கள். இதனால் புவி வெப்பமடைதல் வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story