வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: அரசு ஆஸ்பத்திரியில் 460 படுக்கை வசதிகள் தயார்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் ஆய்வ
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புதிய வகை கொரோனா பாதிப்பை தடுக்க அரசு ஆஸ்பத்திரியில் 460 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புதிய வகை கொரோனா பாதிப்பை தடுக்க அரசு ஆஸ்பத்திரியில் 460 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார்.
சப்-கலெக்டர் ஆய்வு
புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அந்த வைரஸ் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சப்-கலெக்டர் பிரியங்கா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் ஆக்சிஜன் பிளாண்ட், அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா சிறப்பு வார்டு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் வார்டு பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா? என்று டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி, மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவண பிரகாஷ், கொரோனா சிறப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் வனஜா, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
படுக்கை வசதிகள் தயார்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 462 படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதை தவிர கொரோனா சிறப்பு வார்டில் தற்போது 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் அங்கு மேலும் கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த முடியும். புதிய வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் கொரோனா பாதிப்பை கண்டறிய ரத்த மாதிரிகள் பரிசோதனை கூடம் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். ரத்த மாதிரிகள் அதிகமாக வந்ததால் முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் ஆகலாம். மேலும் பாதிப்பை தடுக்க தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த சப்-கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.