புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?
2022-ம் ஆண்டு விடைபெற்று, 2023-ம் ஆண்டு உதயமாக இருக்கிறது. புதிதாக பிறக்கும் ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? என்ற தங்களது எதிர்பார்ப்புகளை பிரபலங்கள் உள்பட சிலர் பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
பொருளாதார நிபுணர்
பொருளாதார துறையில் புலமை வாய்ந்த ஓய்வுப்பெற்ற பொருளாதார பேராசிரியர் இல.வெங்கடசாமி:-
உலக அளவில் இந்திய பொருளாதாரம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளே தள்ளாடிப் போன சூழலில், இந்தியா ஓரளவு மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. உற்பத்தி, தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பழைய நிலைக்கு வந்துள்ளோம். வேளாண் துறையிலும் தன்னிறைவை அடைந்திருக்கிறோம். ஜி-20 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்குவது, உலகளவில் இந்தியாவுக்கு பெருமை. உலக நாடுகளும் இதைத்தான் எதிர்பார்க்கின்றன. ஊழலில்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டிருக்கிறது. எனவே பிறக்கவுள்ள 2023-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் நிச்சயம் முன்னிலைக்கு வரும். அதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கிறது. உலகளவில் முதல் இடத்தை நமது நாட்டின் பொருளாதாரம் பிடித்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.
சின்னத்திரை நடிகை
'பூவிழி வாசலிலே' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் ஜொலிக்கும் நடிகை சுஜிதா:-
ஒவ்வொரு நாடக தொடருமே பல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கியது. கொரோனா காலத்தில் சின்னத்திரையும், சினிமா துறையும் முடங்கியபோது, ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். கிட்ட இருந்து கூட அவர்களுக்கு உதவ முடியாத சூழலை காலம் ஏற்படுத்தியது. அது கொடுமையான காலம். தற்போது அந்த சூழலில் இருந்து மீண்டு வருகிறோம். புதிய வருடம் கலைத்துறைக்கு இன்னும் நல்ல ஆண்டாக அமையவேண்டும். நல்ல படங்கள் வெளியாக வேண்டும். சின்னத்திரை தொடர்களும் நிறைய எடுக்கப்பட வேண்டும். தொடர்கள் நீண்ட நாள் ஓடவேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் அனைவருமே நன்றாக இருக்கமுடியும். எனவே இனி வரும் ஆண்டு பேரிடர் இல்லாத ஆண்டாக, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஆண்டாகவும், பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை தரும் ஆண்டாகவும் அமையவேண்டும். அதுவே கலைத்துறையை சேர்ந்தவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.
விளையாட்டு வீராங்கனை
காமன்வெல்த் வலு தூக்குதல் போட்டியில் 5 தங்கம் வென்று சாதனை படைத்த சென்னை விளையாட்டு வீராங்கனை டாக்டர் ஆர்த்தி:-
கொரோனா எனும் பேரிடர் இந்தியா உள்பட உலக நாடுகளையே அச்சுறுத்தியது. கொரோனா ஓய்ந்துள்ள நிலையில், படிப்படியாக அனைத்து துறைகளிலும் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக விளையாட்டுத்துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுத்துறையின் நிறைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தரும் ஆண்டாக புத்தாண்டு அமையவேண்டும் என்பது என்னை போன்ற வீரர்-வீராங்கனைகளின், ஏன் நாட்டு மக்களின் விருப்பமாகவே இருக்கிறது. சவாலான சூழலிலும் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்திக் காட்டியது. இதுபோலவே வரும் ஆண்டுகளிலும் உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஒருமித்த உணர்வுடன் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. அதற்கு விளையாட்டு வீரர்களும் சூளுரை ஏற்கவேண்டும். அந்தவகையில் புத்தாண்டு புதுமையான, புத்துணர்ச்சிமிக்க ஆண்டாக அமையட்டும். விளையாட்டு வீரர்களின் கனவுகளையும், ஆசைகளையும் எட்டச்செய்யும் ஆண்டாக இருக்கட்டும்.
தொழில் முன்னேற்றம்
நாமக்கல் மாவட்டம் கோப்பணம்பாளையத்தை சேர்ந்த சிந்துஜா:-
கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா இல்லாமல் போன பிறகு, தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடைந்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும் முன்னேறி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மீண்டும் பெரிய அளவில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே 2023-ம் ஆண்டில் பொருளாதாரம் சீரடைந்து தொழில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெற்றி இலக்கு
சின்னார்பாளையம் தனியார் பள்ளி முதல்வர் அய்யப்பன்:-
2023-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வானது மாணவர்களுக்கு சவாலாக இருக்கும். கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு முழுமையான பாடப்பகுதிகளை படித்து எழுதுவதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து தேர்வு அமைந்தது. அதனால் அதை மாணவர்களால் சமாளிக்க முடிந்தது. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்விற்கு மாணவர்கள் நிச்சயம் கடினமாக உழைக்க வேண்டும். ஆர்வத்துடன் படித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.
கொரோனா காலங்களில் ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் செல்போன்களை உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது வரை அவர்களால் செல்போன் தாக்கத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியவில்லை. அதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் வீண்பிடிவாதம், கோபம் மற்றும் மனத் தளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது. சிறிய விஷயத்திற்கே துவண்டு போய் விடுகின்றனர். எனவே மன உறுதியுடன் முயற்சி எடுத்து படித்தால்தான் 2023-ம் ஆண்டின் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி இலக்கை எட்ட முடியும்.
டிராவல்ஸ் தொழில்
ராசிபுரம் தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பாலு:-
பொதுவாக ஆண்டுதோறும் அய்யப்ப சீசன்களிலும், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலங்களிலும் பொதுமக்கள் அதிகம் சுற்றுலா செல்வார்கள். அதனால் அப்போது வாடகை கார்கள் மற்றும் சுற்றுலா வேன்களுக்கான தேவை அதிகரிக்கும். எங்களுக்கு வாடகையும் சற்று கூடுதலாக கிடைக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் டிராவல்ஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாகன போக்குவரத்துக்கு தடை மற்றும் முழு அடைப்பால் தொழில் முற்றிலும் முடங்கியது. முழு அடைப்பு வாபஸ் பெற்ற பிறகு, படிப்படியாக தொழில் மீண்டும் முன்னேற்றம் அடைய தொடங்கி உள்ளது. மேலும் தற்போது அய்யப்ப கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். அதனால் வாடகை கார்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் குறித்த தகவல்கள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. முன்பை போல் கொரோனா பாதிப்பு ஏற்படாமல், 2023-ம் ஆண்டில் பொதுமக்கள் நலமுடன் வாழ்வார்கள். எங்களது தொழிலும் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இறைவனை வேண்டுகிறேன்
நாமக்கல் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரனவ்:-
கொரோனாவின்போது திருமண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை மற்றும் கட்டுபாடுகள் இருந்ததால் தொழில் பெரிய அளவில் பாதித்தது. மத்திய, மாநில அரசுகளின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால், தொழில் மீட்கப்பட்டு உள்ளது. தற்போது தொழில் பெரிய அளவில் இல்லை என்றாலும், பெரிய பாதிப்பு இல்லை. வருகிற புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வாழ்க்கையை நல்ல பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
மக்களின் எதிர்பார்ப்பு
மிரட்டும் புதிய வகை கொரோனா விரைவில் ஓய்ந்து, மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையவேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.