மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு தினத்தை பாதுகாப்பாகவும், அமைதியாக கொண்டாட இன்று மதுரை நகரில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது.
புத்தாண்டு தினத்தை பாதுகாப்பாகவும், அமைதியாக கொண்டாட இன்று மதுரை நகரில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது.
புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு, இன்று (சனிக்கிழமை) நள்ளிரவில் பிறக்கிறது. பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று இரவு பொது இடங்கள், சாலைகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் சுமார் 1300 போலீசார் மற்றும் 100 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாகனங்கள் பறிமுதல்
மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிவேகமாகவும், கவனக் குறைவுடன் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
அனைத்து முக்கிய வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், அந்த பகுதியில் போலீசார் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். கேளிக்கை விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாரின் நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
பைக் ரேஸ்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2 மற்றும் 4 சக்கர ரோந்து வாகனங்கள் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் கண்காணிக்கப்படுவர். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் பற்றி போலீசாரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 100-க்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் காவல் உதவி என்ற அதிகாரப்பூர்வ செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.