புத்தாண்டு கொண்டாட்டம்; சொகுசு விடுதிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதிப்பு


புத்தாண்டு கொண்டாட்டம்; சொகுசு விடுதிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2022 9:11 AM GMT (Updated: 29 Dec 2022 11:34 AM GMT)

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

புத்தாண்டை வரவேற்கும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள் உள்ளிட்ட இடங்களில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க பலர் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. இது தொடர்பாக நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வழங்கியுள்ளது. அதன்படி நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்றும், நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நீச்சல் குளத்திற்கு அனுமதி கிடையாது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போதையில் இருக்கும் நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அதிகமான மது போதையில் இருக்கும் நபர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story