பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப் படுகிறது. இதனால் கோவையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கோயம்புத்தூர்
ஆர்.எஸ்.புரம்


விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப் படுகிறது. இதனால் கோவையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.


விநாயகர் சதுர்த்தி விழா


நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். மேலும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.


நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் கடைகளில் விற்பனை களைகட்டியது. அதில் குறிப்பாக பூக்கள், பூஜை பொருட்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.


மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரம்


அதன்படி கடந்த வாரம் ரூ.600 முதல் ரூ.800-க்கு விற்ற மல்லி கைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.1,600 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை (கிலோவில்) விவரம் வருமாறு:-


ரூ.500-க்கு விற்ற முல்லை ரூ.800, ரூ.400-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.800, ரூ.80-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.120, ரூ.100-க்கு விற்ற அரளி பூ ரூ.200, ரூ.200-க்கு விற்ற வாசமில்லாத மல்லி ரூ.600, ரூ.150-க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.240, ரூ.10-க்கு விற்ற தாமரைப் பூ ஒன்று ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதே போல் விநாயகருக்கு பிடித்தமான எருக்கம் பூ மாலை ஒரு ஜோடி ரூ.50, அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனை ஆனது. வாழைக்கன்று ரூ.30, தென்னங்குருத்து ரூ.20, மா இலை கட்டு ரூ.20, வெற்றிலை, பாக்கு ரூ.10, விநாயகர் குடை ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.


விதவிதமான விநாயகர் சிலைகள்


இதுபோன்று விதவிதமான வண்ணங்களில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் மற்றும் ½ அடி, ஒரு அடி மற்றும் 2 அடி கொண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அதில் சிறிய விநாயகர் சிலை ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது.


இது குறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து சீராக உள்ளது. தேவை அதிகளவு இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.



Next Story