தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்


தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:45 PM GMT)

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் நேற்று முன்தினம் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மாவட்ட இலக்கிய அணி சார்பில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா.எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகப்பா வரவேற்றார்.

இதில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது கடந்த 1973 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால், சிலப்பதிகாரத்தை நினைவு கூறும் வகையில் கலைக்கூடம் அமைக்கப்பட்டது. இதனை தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணி

வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது ஒவ்வொருவரின் வாக்கும் இன்றியமையாதது. எனவே தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். பா.ஜ.க.வை ஒன்றிய ஆட்சியில் இருந்து கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் தனித்தன்மை பாதுகாக்கப்படும். இந்திய ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, கூட்டாட்சி தத்துவம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றிட நாம் கடுமையாக பாடுபட வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரது ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பூம்புகார் என்றென்றும் அவரது பெயரை நினைவு கூறும் என்றார்.

விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், தலைமை கழக பேச்சாளர் கவிஞர் புதுமைப்பித்தன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கழக செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட, மாநில, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.


Next Story