வருகிற 2-ந் தேதிஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வருகிற 2-ந் தேதி ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி பகல் பத்து உற்சவ நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை பெருமாளுக்கு மோகினி அலங்காரம் செய்யப்படுகிறது.
வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதிகாலை 4.45 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பசு மாடுகள் அழைத்து செல்லப்படும்.
பின்னர் சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் வழியாக கொண்டு செல்லப்படுவார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் 2-ந்தேதி முதல் வருகிற 11-ந்தேதி வரை ராபத்து உற்சவ நிகழ்ச்சியும், முத்தங்கி சேவையும் நடக்கிறது. 11-ந்தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம், திருவாசல் சாற்றுமுறையுடன் விழா நிறைவடைகிறது. சொர்க்க வாசல் திறப்பையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக லட்டு தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.