அடுத்த 4 நாட்கள் மிக முக்கியமானவை: நிலவில் 'லேண்டர்' தரையிறங்க முன்னேற்பாடுகள் தீவிரம்


அடுத்த 4 நாட்கள் மிக முக்கியமானவை: நிலவில் லேண்டர் தரையிறங்க முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 20 Aug 2023 1:25 AM GMT (Updated: 20 Aug 2023 5:09 AM GMT)

'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்கும் 'விக்ரம் லேண்டர்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது. தற்போது நிலவு சுற்றுவட்டப்பாதையில் நெருங்கிவரும் நிலையில், திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.47 மணிக்கு நிலவில் லேண்டர் தரையிறங்க இருக்கிறது.இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் நிலவு சுற்றுவட்டப்பாதையில் லேண்டரின் உயரத்தை குறைக்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'சந்திரயான்-3' விண்கலத்தின் 40 நாள் நிலவு பயணத்தில் 35 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. எங்கள் திட்டப்படி அடுத்த 4 நாட்களும் மிகவும் முக்கியமானவை. இந்த நாட்களில் வெற்றிகரமாக செயல்பட்டு நிலவில் லேண்டர் மெதுவாக தரையிறங்க வேண்டும். இதற்கான சிக்னல் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டருக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த செயல்பாட்டுக்குப் பிறகு லேண்டர் தானியங்கி முறையில் செயல்படும். இதற்கான தரவுகளின் அடிப்படையிலும், அதன் சொந்த நுண்ணறிவு மூலமும் அடுத்தகட்ட செயல்பாடுகளை எப்படிச் செய்வது என்றும் அதுவே முடிவு செய்யும்.

சுற்றுப்பாதையில் இருந்து, ஒரு நொடிக்கு 2 கி.மீ. ஆக இருக்கும் லேண்டரின் வேகம், நிலவின் மேற்பரப்பைத் தொடும்போது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுவிடும். நிலவில் தரையிறங்குவதற்கு லேண்டர் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய சவாலாகும். 'சந்திரயான்-2' தோல்வியடைந்தது இந்த இடத்தில்தான் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

முந்தைய தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதால் இந்த முறை லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்காக லேண்டரின் அடிப்பகுதியில் 3 குட்டி ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, லேண்டர் மெதுவாக தரையிறக்கப்படும். அதற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து லேண்டரில் இருந்து சாய்வுபலகை போன்ற அமைப்பின் மூலம் 'பிரக்யான் ரோவர்' வெளியே வந்து நிலவில் கால் பதிக்கும். இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவில் ஆய்வுப்பணியில் முழுவீச்சுடன் ஈடுபடும். 'சந்திரயான்-2' விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு நிலவின் மேல்பகுதியில் சுற்றிவரும் 'ஆர்பிட்டர்' என்ற கருவி, 'விக்ரம் லேண்டர்' மற்றும் 'பிரக்யான் ரோவரை' தொடர்ந்து கண்காணித்து தகவல்களை பெற்று, பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பணி மிகவும் நெருக்கடி நிறைந்த சவாலான பணியாகும். இதை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துமுடிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேசுவரன் கூறும்போது, ''சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நல்ல நிலையில் நிலவு சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகிறது. மீண்டும் இதன் உயரத்தைக் குறைக்கும் பணி நாளை (இன்று) அதிகாலை 2 மணி அளவில் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடக்கும். அதன்படி நிலவின் மேற்பரப்பில் இருந்து குறைந்தபட்சமாக 30 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 100 கி.மீ. தொலைவிலும் கோழிமுட்டை வடிவில் சுற்றிவரும் வகையில் சுற்றுவட்டப்பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.

இவை அனைத்தும் 'விக்ரம் லேண்டர்', நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளாகும். இதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லேண்டர் மூலம் நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை வரும் நாட்களில் இந்தியா மேற்கொள்ளும்' என்றார்.


Next Story