கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச்சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அவர்களை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கும் அழைத்துச்சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கார் வெடிப்பு

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரை சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோரை கைது செய்தனர்.

காவலில் எடுத்து விசாரணை

தொடர்ந்து கைதான 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், உயிரிழந்த ஜமேஷா முபின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பலமுறை ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்தது. இதனால் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், சனாபர் அலி ஆகிய 6 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

கோவை அழைத்து வந்தனர்

இந்த நிலையில் அந்த 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலையில் கோவைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோவையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் ஜமேஷா முபின், தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள், அவரை ரகசியமாக சந்தித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சத்தியமங்கலம் காட்டில் ஜமேஷா முபின் நடத்திய ரகசிய கூட்டத்தில் பங்கேற்றது யார்? அதில் பேசிக்கொண்டது என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் கேட்டனர். அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

சத்தியமங்கலம் வனப்பகுதி

தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த 6 பேரையும் ஜமேஷா முபின் வீடு, கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதி, ரகசிய கூட்டம் நடத்திய சத்தியமங்கலம் வனப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பி.ஆர்.எஸ்.மைதானத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story