31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் கோவையில் தி.மு.க. பெண் கவுன்சிலர் வீடு உள்பட 22 வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் கோவையில் தி.மு.க. பெண் கவுன்சிலர் வீடு உள்பட 22 வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் வெடிப்பு வழக்கு
கோவையில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்தது. இதில் அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபீன் (வயது 27) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் வெடி மருந்துகள், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்து இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
12 பேர் கைது
பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். அத்துடன் உயிரிழந்த ஜமேஷா முபீன் மற்றும் கைதான 6 பேரின் வீடுகளில் சோதனை செய்தனர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக் மற்றும் கோவையை சேர்ந்த பெரோஸ்கான், முகமது தவ்பீக், ஷேக் இனாயத்துல்லா, சனோபர் அலி மற்றும் முகமது இத்ரீஸ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளனர். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரபி பாடசாலை
இந்த நிலையில் கோவையில் உள்ள அரபி பாடசாலையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பாடசாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அடையாளம் தெரிந்த 10 பேர் மற்றும் அடையாளம் தெரியாத பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அந்த பாடசாலையில் படித்தவர்கள், அவர்களுடன் தொடர்பு வைத்தவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்களின் முழு தகவல்கள், யாரிடம் எல்லாம் பேசுகிறார்கள், சமூக வலைத் தளத்தில் பரிமாற்றம் செய்வது என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
22 இடங்களில் சோதனை
இந்தநிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 25 பேர் 5-க்கும் மேற்பட்ட கார்களில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவை வந்தனர். அவர்கள் கோவை மாநகர போலீசார் பாதுகாப்புடன் உக்கடம் பகுதிக்கு சென்றனர்.
அங்கு கோவை மாநகராட்சி 82-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான முபஷீராவின் வீடு, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் தமிமுன் அன்சாரி உள்பட 22 பேர் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 5.30 மணிக்கு சோதனை தொடங்கியது.
அப்போது அந்த 22 வீடுகளுக்குள்ளும் அதிகாரிகள் யாரையும் உள்ளே விட வில்லை. அது போல் அந்த வீடுகளில் இருந்து யாரையும் வெளியே விடவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்கள், அவர்கள் யாரிடம் எல்லாம் பேசினார்கள் என்று கேட்டறிந்தனர்.
எதிர்ப்பு
அத்துடன் அந்த வீடுகளின் ஒவ்வொரு அறைக்கும் சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சில பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள், அங்கு கூடியவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
கோவை மாநகரில் பைசல் ரகுமான், முகமது உசேன், சம்சுதீன், சிக்கந்தர், பெர்னாஸ், கிணத்துக்கடவு முஸ்தபா, அம்ஜித், அலி ஷேக் மன்சூர், அசார், இப்ராகிம், அப்துல் ரகுமான், சுகைன், முகமது ஷாகின், முகமது உசேன், சையத், ஜஹாங்கீர், ஷர்ஜுன், அப்துல்தகீர், அசாருதீன், முகமது ஆசிக் உள்பட 22 பேர் வீடுகளில் நடந்த சோதனை காலை 9.30 மணிக்கு முடிவடைந்தது.
ஆவணங்கள் சிக்கின
இந்த சோதனையின்போது மடிக்கணினி, செல்போன்கள், ஹார்டு டிஸ்குகள் உள்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. அந்த ஆவணங்களில் இருப்பது என்ன? யாருக்கு எந்த வகையான தகவல்களை பரிமாறி உள்ளனர், இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் போலீசார் சோதனை நடத்திய 22 பேரில் 18 பேர் அரபிக் பாடசாலையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 4 பேரும், கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஆவர். எனவே தற்போது கைப்பற் றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் இருக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர சென்னையில் 3 இடங்கள், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே முகமது இத்ரீஸ் என்பவரின் வீட்டிலும், தெலுங்கானா மாநிலத்தில் 6 இடங்களிலும் என மொத்தம் 31 இடங்களில் ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.