என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை- எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்-பரபரப்பு


என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை-  எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்-பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்பொழி, ஏர்வாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

பண்பொழி, ஏர்வாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செயற்குழு உறுப்பினர் வீடு

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பண்பொழியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி ஜின்னா வீடு உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இவரது வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்று தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது, முகமது அலி ஜின்னா வீட்டில் இல்லை. எனவே வீட்டில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், வீட்டிலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது காலை 7 மணியளவில் முடிவுற்றது.

சாலைமறியல்

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பண்பொழி-தென்காசி நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கைது செய்தனர். பின்னர் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

ஏர்வாடி

இதேேபால் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள அரபிக் மதரசா கல்லூரியில் டெல்லி மற்றும் சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சீனிவாசன் தலைமையில் சோதனை செய்தனர். காலை 6 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 100-க்கும் மேற்பட்ட தமிழக போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.


Next Story