சிவகங்கையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக சிவகங்கையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக சிவகங்கையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
என்.ஐ.ஏ. சோதனை
தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கையில் வசித்து வரும் வாலிபர் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிவகங்கையில் கல்லூரி சாலை வீதியில் வசித்து வரும் விக்னேஷ் (வயது 25) என்பவரின் வீட்டில் நேற்று அதிகாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆவணங்கள்
விக்னேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த சோதனையின்போது வெளி ஆட்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் தலைமையில் வந்த 3 அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். மேலும் உள்ளூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரும் வந்திருந்தனர்..
இந்த சோதனை காலை 5 மணி முதல் 7 மணி வரை 2 மணி நேரம் நடந்தது. சோதனையின் முடிவில் அங்கிருந்து சில புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
மேலும் விக்னேசுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த யாருடன் தொடர்பு இருந்தது? என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?
இதற்கிடையே விக்னேஷ். நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் என தகவல்கள் பரவின. ஆனால், அதை மறுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.