முன்னாள் நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மணி நேரம் சோதனை


முன்னாள் நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மணி நேரம் சோதனை
x
தினத்தந்தி 23 July 2023 4:37 PM GMT (Updated: 24 July 2023 7:54 AM GMT)

திருப்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் மடிக்கணினி, செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

திருப்பூர்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் தஞ்சை, நெல்லை, கும்பகோணம் உள்பட 24 இடங்களில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை( என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த குலாம் காதர் லே-அவுட் பகுதியில் வசிக்கும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநில பேச்சாளர் முபாரக் பாட்ஷா (வயது 42) என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கொலை வழக்கு தொடர்பாக விசாரணை

காலை 5.30 மணிக்கு என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் முபாரக் பாட்ஷா வீட்டிற்கு சென்றனர். காலை 9.30 மணிவரை சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் சோதனையும், அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. இதன் முடிவில் அவருடைய வீட்டில் இருந்து ஒரு மடிக்கணினி, 2 செல்போன்கள், 1 சிம்கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காலை 9.30 மணிக்கு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story