நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி
வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால், நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால், நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நீலகிரி பூண்டு
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாகவும் உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளிலும் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
விலை வீழ்ச்சி
தற்போது விவசாயிகள் விளைந்த பூண்டை அறுவடை செய்து, லாரிகள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். ஆனால், தற்போது இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மிக குறைந்த விலையில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு பூண்டு வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது.
இதனால் பூண்டு பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கொரோனா காலத்தில் பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது காய்கறி மண்டிகளுக்கு பூண்டு வரத்து அதிகரித்து உள்ள காரணத்தால், ஒரு கிலோ பூண்டு ரூ.60 முதல் ரூ.80 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.