நீலிவனேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது
நீலிவனேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மதியம் தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்ததால், தேரை இழுக்க முடியாமல் பக்தர்கள் கலைந்து சென்றனர். இதனால் தேர் நிலைக்கு வராமல் தடைபட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 3.10 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து தேர் மாலை 5.20 மணிக்கு நிலையை அடைந்தது. தேருக்கு முன்பு பக்தர்கள் தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். மேலும் தேரின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 7-ந்தேதி இரவு பஞ்சப்பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.