கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா
நிரந்தர வேலை வழங்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுப்பதற்காக என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூர் வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள், நாங்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்கம் 1,2 மற்றும் 3 ஆகிய இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறோம். 3 சுரங்கங்களிலும் சேர்த்து 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம்.
நிரந்தர வேலை
ஆனால் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். நிரந்தர தொழிலாளர்களை விட அதிக வேலை செய்கிறோம். இதுவரை சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்யவில்லை. மற்ற ஒப்பந்த தொழிலாளர்களை போல எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஆகவே இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதை கேட்ட போலீசார், மனுவாக எழுதி கொடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்து விட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.