என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
20 நாளாக நடந்து வந்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்ட தோடு, உடனடியாக அனைவரும் பணிக்கு திரும்பினர்
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 26-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இப்பிரச்சினை தொடர்பாக 7 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் நேற்றும் 20-வது நாளாக இவர்களது போராட்டம் நீடித்தது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில் 8-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அவரது அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், என்.எல்.சி. ஆலோசகர் தியாகராஜூ, அதிகாரிகள் திருக்குமரன், உமாமகேஸ்வரன், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணிசெல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலாளர் சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டம் வாபஸ்
என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டம் 20-வது நாளை எட்டியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வர இருக்கிறது. அந்த தீர்ப்புக்கு என்.எல்.சி. நிர்வாகம் கட்டுப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் வருகிற 22-ந்தேதி வரை வேலை நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என்று எங்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
பணிக்கு திரும்பினர்
ஆகவே தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர இருக்கிறோம். இவ்வாறு சிறப்பு செயலாளர் சேகர் கூறினார். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்கு பிறகு உடனடியாக பணிக்கு திரும்பினர்.
இதன் மூலம் கடந்த 20 நாட்களாக நடந்து வந்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.