என்.எம்.எம்.எஸ். தேர்வில் 44 மாணவ-மாணவிகள் தேர்ச்சி
என்.எம்.எம்.எஸ். தேர்வில் 44 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை அரியலூர் மாவட்டத்தில் 1,237 மாணவர்களும், 1,617 மாணவிகளும் என மொத்தம் 2,854 பேர் எழுதினர். அந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று மதியம் வெளியானது. இதில் அரியலூர் மாவட்டத்தில் 44 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். என்.எம்.எம்.எஸ். தேர்வு தேர்ச்சியில் தமிழகத்தில் கல்வி மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டம் 46-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் வரை வங்கி கணக்கில் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகையாக மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.48 ஆயிரம் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.