பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு


பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
x

இனிவரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றி எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் முப்பது ஆண்டுகளாக கோவிலுக்கு சொந்தமான இடங்களை 160 கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, "பழனி கோவிலை சுற்றி இனிவரும் காலங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது. பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகள் இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது.

கிரிவலப் பாதையை இணைக்கும் சிறு பாதையில் கூட வாகனங்கள் வராதபடி தடுப்பு ஏற்படுத்த வேண்டும். பழனி கோவில் கிரிவலப் பாதையில் உள்ள நிரந்தர கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்றி, அது தொடர்பாக பழனி நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




Next Story