சத்துணவு மையங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படாது


சத்துணவு மையங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படாது
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு வழங்கிய உணவு குறித்து தினமும் தகவல் தெரிவிக்காவிட்டால், சத்துணவு மையங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படாது என்று அமைப்பாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

மாணவர்களுக்கு வழங்கிய உணவு குறித்து தினமும் தகவல் தெரிவிக்காவிட்டால், சத்துணவு மையங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படாது என்று அமைப்பாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வு கூட்டம்

வால்பாறையில் சத்துணவு மையங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது தொடர்பாக ஆய்வு நடத்த கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) மகேஷ்வரி, வால்பாறையில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்.

அட்டகட்டி முதல் சோலையாறு அணை பகுதி வரை உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு நகராட்சி சமுதாய கூடத்தில் வால்பாறை பகுதியில் உள்ள 89 பள்ளிகளை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சத்துணவு பணிகளின் கணக்கு அதிகாரி சந்தரபிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஷ்வரி பேசியதாவது:-

தினந்தோறும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவுகள் தொடர்பான பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்க வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை சத்துணவு மையங்களை சுத்தம் செய்ய வேண்டும். கெட்டுப்போன அரிசி, முட்டை, காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. உணவில் விஷத்தன்மை உள்ள எந்த பொருட்களும் கலந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நகராட்சிக்கு கடிதம்

ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தினமும் கோவை மாவட்ட சத்துணவு அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். குறுஞ்செய்தி அனுப்பாத சத்துணவு மையங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படாது. தரமான அரிசி, முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவில்லை என்றால் உடனே அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

விரைவில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதையும் அமைப்பாளர்கள் கவனமுடன் செயல்படுத்த வேண்டும். காட்டுயானைகளால் சேதமான சத்துணவு மையங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மையங்களில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்று சத்துணவு அமைப்பாளர்களிடம் கேட்டறிந்தார். இதில் நகராட்சி சத்துணவு அதிகாரி தினேஷ்குமார் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story